அடங்காத கொரோனா... வரலாற்றில் முதல்முறையாக ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) பொதுக்குழு கூட்டம் ரத்து!
World Leaders Won't Gather For The First Time In 75 Years History Of UN General Assembly
ஐநாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் 193 நாடுகளின் தலைவர்களும் ஒவ்வொரு ஆண்டும் கூடி பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்றுவது வழக்கம். இந்த ஆண்டுடன் ஐநா 75 ஆண்டுகளை நிறைவு செய்வதால் உலக நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை நியூ யார்க்கில் செப்டம்பர் மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இக்கூட்டத்தை நடத்த முடியாது என்பதால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்து தலைவர்களும் வீடியோ மூலமாக உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஐநா பொதுக்குழுத் தலைவர் திஜ்ஜனி முகமது பாந்தே செய்தியாளர்களிடம் பேசுகையில், “செப்டம்பர் மாதம் நியூ யார்க்கில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு உலக தலைவர்கள் வரமாட்டார்கள். பொதுக்குழு விவாதத்தில் உள்ளூர், உலக விவகாரங்கள் குறித்து 193 உலக நாடுகளின் தலைவர்கள் எவ்வாறு உரையாற்றுவர்கள் என்பது பற்றி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும்.
உலக தலைவர்களால் நியூ யார்க்கிற்கு தனியாக வர முடியாது. ஒரு அதிபர் தனியாக பயணிப்பதில்லை. ஆட்சித்தலைவர்கள் தனியாக பயணிக்கமாட்டார்கள். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பல நாடுகளின் பிரதிநிதிகளை நியூ யார்க்கில் ஒன்று திரட்டுவது சாத்தியமில்லை. கடந்த 74 ஆண்டுகளாக நடந்தது போல தலைவர்களை நேரடியாக வரவழைக்க முடியாது. ஆனால் கூட்டம் நிச்சயம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஐநா தலைவர்கள் கூட்டம் ஒரு வார காலத்திற்கு நடைபெறும். இதற்காக தலைவர்கள் மட்டுமல்லாமல் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிகாரிகளும் வருவது வழக்கம். தலைவர்களின் உரை, உணவு விருந்துகள், வரவேற்பு நிகழ்ச்சிகள், தலைவர்களின் தனிப்பட்ட சந்திப்புகள் என ஏராளமான நிகழ்வுகள் அரங்கேறும். இந்த ஆண்டு கொரோனாவால் கூட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும், காணொளிக் காட்சி வாயிலாக தலைவர்களின் உரையை எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment